பல நேரங்களில் பல மனிதர்கள்

சிறுவயதில் கிரீம் பிஸ்கெட் சாப்பிடும் நற்பேறு எப்போதாவது வாய்க்கும். கடக் முடக்கென்று கடித்துத் தின்றுவிட்டால் சீக்கிரம் தீர்ந்து விடுமே என்று அதை இரண்டாகப் பிரித்து, அதன் ஒரு பாகத்தில் மட்டும் ஒட்டியிருக்கும் கிரீமை கொஞ்சம் கொஞ்சமாக நக்கி நக்கித் தீர்த்துவிட்டு, பிறகு ஒவ்வொரு பாதியாக கொஞ்சமே கொஞ்சமாகக் கடித்துக் கடித்து ஒரு சின்ன பிஸ்கெட்டை ஒரு மணி நேரத்திற்கு ரசித்துச் சாப்பிட்ட அனுபவம் என் வயதொத்தவர்கள் அனைவருக்குமே இருக்கும். அப்படி ஒரு கிரீம் பிஸ்கெட்டாக பாரதிமணியின் பல நேரங்களில் பல மனிதர்களை துளித் துளியாக நான்கைந்து நாட்களாக ருசித்து ருசித்துப் படித்தேன்.

பாரதிமணி அவர்களின் அனுபவத் தொகுப்பு. பின்னட்டை நுண்தகவல்களாலான, ஒரு தலைமுறைப் பிரதிநிதியின் குட்டிச் சுயசரிதை. அக்காலகட்டத்தின் சரித்திரம் என்கிறது. உண்மைதான்.

கட்டுரைகள் அனைத்தும் அவரது அரை நூற்றாண்டு டெல்லி வாழ்க்கை அனுபவங்கள்தான். ஆனால் அவர் சொல்லும் அந்த அனுபவங்கள் டெல்லியில் வாழ்ந்த, வாழும் லட்சக்கணக்கான மக்களில் யாருக்குமே கிடைக்காத விசேஷமான தனீ..யான அனுபவங்கள். டெல்லியில், அறிஞர் அண்ணாவுடன் சாலமன் அண்ட் ஷீபா, பென்ஹர் படம் பார்க்கும் பாக்கியம் அவருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அறிஞர் அண்ணா, கக்கன். லால்குடி ஜெயராமன், உமையாள்புரம் சிவராமன், வேலூர் ராமபத்ரன், மஹாராஜபுரம் சந்தானம்,  எல்.சுப்ரமணியம், தி.ஜா, மேஜர் சுந்தர்ராஜன், அசோகமித்திரன், புலவர் கீரன் இப்படி எத்தனையோ விஐபிக்களை தன் ஸ்கூட்டரில் உட்கார்த்தி டெல்லியைச் சுற்றியிருக்கிறார். சுப்புடுவின் ஆத்மார்த்த நண்பர். நேருஜியோடு டி.கே.எஸ் சகோதரர்களின் நாடகம் பார்க்கும் பேறு,  அன்னை தெரஸாவுடன் இரண்டு மணிநேரம் விமானத்தில் பக்கத்து இருக்கையில் பயணிக்கும் பாக்கியம். சிறுவயதில் கோடை விடுமுறையில் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில் நாடகப் பயிற்சி பெறும் வாய்ப்பு.  ஒரு மனிதருக்கு எப்படி இப்படியெல்லாம் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன என்று ஆச்சரியமாக இருக்கிறது.

நான் சிறுவயதில் தினத்தந்தியில் சாணக்கியன் சொல்லில் “சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பவன் முட்டாள், சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்பவன் புத்திசாலி“ என்று படித்தது இன்றும் ஞாபகத்தில் உள்ளது. ஆனால், பாரதிமணிக்கு அவரது வாழ்வில் கிடைத்த அருமையான சந்தர்ப்பங்களை எத்தனை அதிபுத்திசாலியாலும் தானாக ஏற்படுத்திக் கொண்டுவிட முடியாது. இயற்கை ஒரு மனிதன் மீது காரணமே இல்லாமல் எக்கச்சக்கமான அன்பும், கருணையும், ஆசையும் கொண்டு சந்தர்ப்பங்களுக்கு மேல் சந்தர்ப்பங்களாக வாரி வழங்கினால்தான் உண்டு. பாரதிமணியும் தன் வாழ்வில்  கிடைத்த அந்த சந்தர்ப்பங்களை அப்படித்தான் பார்த்திருக்கிறார். அதனால்தான் அவற்றை எழுத்தில் பதிவு செய்யும்போது, நான் எத்தனை பெரிய ஆள் பார்த்தாயா? என்பது மாதிரியான தொனி சிறிதும் இல்லாமல், மிக எளிமையாக, நகைச்சுவையாக இன்னும் சொல்லப்போனால், தன் ஆளுமையை சற்று குறுக்கிக் கொண்டு பதிவு செய்திருக்கிறார். படிக்கும் நமக்குத் தான் ஜிவ்வென்று உற்சாகமும், பெருமையும் ஏறுகிறது. முஜிபுர் ரஹ்மான், ஷேக் ஹசீனா ஆகியோருடனான தன் நட்பைப் பற்றி எழுதும் அதே தொனியில்தான் நாற்பதுகளிலேயே தமிழ்நாட்டைவிட்டு பங்களாதேஷில் குடியேறிவிட்டு, எழுபதுகளில் இன்னும் பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி எல்லாம் நடிக்கிறார்களா என்று கேட்கும் பெரியவரைப் பற்றியும் எழுதுகிறார். (பிறகு பங்களாதேஷ் போகும்போதெல்லாம் வீட்டிலிருக்கும் பழைய குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளை அந்தத் தமிழர்களுக்காக ஞாபகமாக அள்ளிக் கொண்டு போகிறார்!) பெரியோரை வியத்தலும் இல்லை. சிறியோரை இகழ்தலும் இல்லை.

சுஜாதாவின் அருமையான சிறுகதைகளில் ஒன்றான நிலம் என்ற கதையின் நாயகனுக்கு மணிதான் இன்ஸ்பிரேஷன் என்று சுஜாதாவே அவரிடம் சொல்லும் போது, மணிக்கு எப்படி இருந்ததோ, தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒரே குஷி.

பூரணம் விஸ்வநாதன் ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிக்கும் காலகட்டத்தில் (அவருடன் பணிபுரிந்த ராமநாதன் என்ற நண்பர் பற்றி, அவர் சரத்குமாரின் தந்தை என்று ஒரு கொசுறு தகவல்!) மணியும், பூரணமும் கேண்டினில் டீ சாப்பிடும் போது ஒரு பர்மியப் பெண் அறிமுகமாகிறாள். அவள் பர்மியச் செய்திகள் வாசிப்பவள். அவள் தொடர்ந்து இந்தியாவில் தங்குவதில் சில சட்டச் சிக்கல்கள். “நிலம்“ கதையின் உண்மை நாயகனான மணி தன் செல்வாக்கால் அவள் இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் தங்குவதற்கான அனுமதியை ஒரு நொடியில் வாங்கித் தந்துவிடுகிறார். அந்தப் பெண் யார் என்று அறிந்தால் மயங்கிவிழுந்து விடுவீர்கள். அவள் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் ஸுகி!

என் போன்ற தகவல் கொண்டாடிகளுக்கு இப்படி சின்னச் சின்னதாக புத்தகம் முழுவதும் ஏராளம் ஏராளமான தகவல்கள். ஆனால் இப்படி அவர் தொடர்புடைய விஐபி தகவல்கள் மட்டுமே உள்ள தொகுப்பு அல்ல. சுதந்திரம் வந்த காலத்தில் இருந்த அரசியல், பொருளாதாரம், ஊழல், எல்லாவற்றைப் பற்றிய பதிவும் கூட.  மொரார்ஜி தேசாயின் மகன் காந்தி தேசாயின் ஊழல்கள், ரயில் பயணிகளுக்கு அலுமினியம் foilல் மட்டுமே உணவு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவிற்குப் பின்னால் இருந்த பெரிய ஊழல் என்று ஒரு புறம். திரைப்படங்களுக்கு தேசிய விருது வழங்குவதில் உள்ள அரசியல் பற்றி ஒருபுறம். பசுமைப்புரட்சி காலத்தில் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தானை அகற்றி, முதலிடத்தை இந்தியா கைப்பற்ற பஞ்சாப் விவசாயிகள் பட்ட பாடு, அவர்களின் கடும் உழைப்பு பற்றி ஒரு புறம் என எத்தனை எத்தனையோ புது விஷயங்கள்.

இது மாதிரியான தகவல்களை இவர் மாதிரியான பெரியவர்கள் எழுதினால் மட்டுமே நாம் அறிய முடியும். நாஞ்சில்நாடன் இந்த்த் தொகுப்பு பற்றிச் சொல்லும் போது, “இளைய தலைமுறையினர் அந்தக் காலத்தை, அவற்றின் நன்மை தீமைகளுடன் அறிந்து கொள்ள வேறு மார்க்கம் இல்லை. ஏனெனில் வரலாற்றில் பொய் எழுதிச் சேர்க்கும் மாயம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. பாட புத்தகங்களே இன்று பெரும் பொய் புகல்கின்றன,“ என்று சொல்கிறார்.

பாடபுத்தகங்களே பொய் புகலும் இக்காலத்தில் மெய்யான பதிவாக, அதுவும் நான் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறேன் பார்த்தாயா? என்பது மாதிரியான எந்த அலட்டலும் இன்றி வந்திருக்கிறது இந்தக்  கட்டுரைத் தொகுப்பு. எஸ்.ராவும் இந்த நூல் பற்றிச் சொல்லும் போது, “மலைகள் ஒரு போதும் சப்தமிடுவதில்லை. நம் குரலைத்தான் எதிரொலிக்கின்றன. தன்னை அறிந்த மனிதர்களும் ஒருவகையில் அப்படியே. பாரதி மணி அவர்களில் ஒருவர்.“ என்கிறார்.

ஒரு கட்டுரையில் போகிற போக்கில் குருத்த்துடன் யமுனையாற்றில் மீன் பிடிக்கப் போனது பற்றி ஒரு வரி சொல்லிக் கடந்து செல்கிறார். அவரது பரந்த நட்பு வட்டத்தில், நெடிய அனுபவத்தில் இன்னும் இது மாதிரி எத்தனை எத்தனை அனுபவங்களோ? எல்லாமே அடுத்தடுத்து தொகுப்புகளாக வரவேண்டும்.

என் போன்ற ரசிகர்கள் காத்திருக்கிறோம்…..

——————————————————————————————————————–பல நேரங்களில் பல மனிதர்கள்

பாரதிமணி

சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு. விலை ரூ.200.00

2 thoughts on “பல நேரங்களில் பல மனிதர்கள்

  1. பல நேரங்களில் பல மனிதர்கள் – சிறுவயதில் கிரீம் பிஸ்கெட் சாப்பிடும் நற்பேறு எப்போதாவது வாய்க்கும். கடக் முடக்கென்று கடித்துத் தின்றுவிட்டால் சீக்கிரம் தீர்ந்து விடுமே என்று அதை இரண்டாகப் பிரித்து, அதன் ஒரு பாகத்தில் மட்டும் ஒட்டியிருக்கும் கிரீமை கொஞ்சம் கொஞ்சமாக நக்கி நக்கித் தீர்த்துவிட்டு, பிறகு ஒவ்வொரு பாதியாக கொஞ்சமே கொஞ்சமாகக் கடித்துக் கடித்து ஒரு சின்ன பிஸ்கெட்டை ஒரு மணி நேரத்திற்கு ரசித்துச் சாப்பிட்ட அனுபவம் என் வயதொத்தவர்கள் அனைவருக்குமே இருக்கும். அப்படி ஒரு கிரீம் பிஸ்கெட்டாக பாரதிமணியின் பல நேரங்களில் பல மனிதர்களை துளித் துளியாக நான்கைந்து நாட்களாக ருசித்து ருசித்துப் படித்தேன்.- அற்புதமான மதிப்புரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி எழுதித் தீராத பக்கங்கள்

    Liked by 1 person

பின்னூட்டமொன்றை இடுக